நற்றிணை:
"நீரின்று அமையா உலகம் போல்த்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி" - கபிலர் [1 : குறிஞ்சி: தலைவி ]
"நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே" - கபிலர் [1: குறிஞ்சி: தலைவி ]
"நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டினோர் திறத்தே" - கபிலர் [32: குறிஞ்சி: தோழி]
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" - பெயர் தெரியவில்லை - [355:குறிஞ்சி: தோழி]
"ஒருமுலை அறுத்த திருமா உண்ணி"
- மதுரை மருதன் இளநாகனார் [216:மருதம்: தலைவி]
"நும்மினும் சிறந்தன்று, நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே" - [172: நெய்தல்: தோழி]
"இளமையிற் சிறந்த வளமையும் இல்லை" - [126: பாலை: தலைவன்]
"இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு"
- கருவூர் கோசனார் [214:பாலை: தலைவி]
"சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே"
- அம்மூவனார் [397: பாலை: தலைவி]
"கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்"
- போதனார் [110:பாலை: நற்றாய் ]
"நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகுதலும்"
- [160 : குறிஞ்சி: பாங்கன்: கழற்றெதிர் மறை]
குறுந்தொகை:
"கொங்குதேர் வாழ்க்கை அங்கிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ" - இறையனார் [2: குறிஞ்சி: தலைவன்]
"வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதள்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே"
- பாலை பாடிய பெருங்கடுங்கோ [135: பாலை :தோழி]
"செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
- செம்புலப் பெயல்நீரார் [40: குறிஞ்சி: தலைவன்]
"இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியர் என் கணவனை
யானா கியர் நின் நெஞ்சு நேர்பவளே"
- அம்மூவனார் [49: நெய்தல் -தலைவி]
"சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு இவன்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே " - கபிலர் [குறுந்: 18 - தோழி]
"உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்"
- பாலை பாடிய பெருங்கடுங்கோ [283: பாலை - தலைவி]
"பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலம் யானே"
- நக்கீரர் [குறுந்: 280 -குறிஞ்சி: தலைவன்]
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்"
- உகாய்க்குடி கிழார் [குறு63:பாலை: தலைவன்]
" ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல" - வெள்ளிவீதியார் [58:குறிஞ்சி:தலைவி]
"நிலத்தினும் பெரிதே வனினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே--- நாடனொடு நட்பே"
- தேவகுலத்தார் [குறுந்: 3 : குறிஞ்சி: தலைவி ]
"கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல" - ஆலங்குடி வங்கனார் [குறுந்: 8: மருதம்: காதற் பரத்தை]
"காமம் ஒழிவதாயினும் ---எம்
தொடர்பு தேயுமோ நின்வயினான" - கபிலர் [குறுந்: 42: குறிஞ்சி: தோழி]
"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக்காங்கு"
- வெள்ளிவீதியார்[குறுந்:27:பாலை: தலைவி]
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
----------------------------------
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே "
- செம்புலப்பெயனீரார் [குறுந்: 40: குறிஞ்சி: தலைவி]
"இம்மை மாறி மறுமையாகினும் நீயாகியர் எம் கணவனை"
- அம்மூவனார் [குறுந்:49: நெய்தல்: தலைவி]
"கல்பொரு சிறுநுரை போல்
மெல்ல மெல்ல இல்லாகுதுமே"
- கல்பொரு சிறுநுரையார் [குறுந்: 290: நெய்தல்: தலைவி]
"மீனெறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே"
- மீனெறி தூண்டிலார் [குறுந் 54: குறிஞ்சி: தலைவி]
"வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே" - கபிலன் [குறுந்:100 : குறிஞ்சி: தலைவன்]
"பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல" பரணர் [குறுந்: 292]
ஐங்குறுநூறு:
"அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே" - கபிலர் [203: குறிஞ்சி: தலைவி]
" விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே" ஓரம்போகியார் [2:மருதம்: தோழி]
நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க [மருதம் 1:2]
விளைக வயலே வருக இரவலர் [மருதம் 2:2]
பால்பல ஊறுக பகடுபல சிறக்க [மருதம் 3:2]
பகைவர் புல்ஆர்க பார்ப்பார் ஓதுக [மருதம் 4:2]
பசி இல்லாகுக பிணிசேன் நீங்குக [மருதம் 5:2]
வேந்துபகை தணிக ஆண்டுபல நந்துக [மருதம் 6:2]
அறம் நனிசிறக்க அல்லது கெடுக [மருதம் -7:2]
அரசுமுறை செய்க களவு இல்லாகுக [மருதம் - 8- 2]
நன்று பெரிது சிறக்க தீதில்லாக [மருதம் 9 : 2]
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க [மருதம் 10:2]
கலித்தொகை:
" ஒன்றன் கூறுடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை"
- பாலை பாடிய பெருங்கடுங்கோ [18: பாலை: தோழி]
"துன்பமும் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு"
- பாலை பாடிய பெருங்கடுங்கோ [6: பாலை: தலைவி]
"சுடர் தொடீஇ கேளாய்...அக்கள்வன் மகன்"
-பாலைபாடிய பெருங்கடுங்கோ [ 51: குறிஞ்சி: தலைவி]
"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்" - சோழன் நல்லுருத்திரன் [103: முல்லை: தோழி]
"பலவுறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் அன் செய்யும்"
- [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்]
"சீர்கெழு வெண்முத்தும் அணிபவர்க்கு அல்லதை
நீரிலே பிறப்பினும் நீருக்கு அவைதாம் என்செய்யும்"
- [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்]
"ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழுக்கு அவைதாம் என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கனையளே"
- [9: பாலை: செவிலிக்கூற்று பாடல்: இக்கூற்று கண்டோர்/ முக்கோல் பகவர்]
"ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோற்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வவ்வல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்" - நல்லந்துவனார்
"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடே போல்"
"என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும்" - பாலை பாடிய பெருங்கடுங்கோ
"தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம் துஞ்சு" - நல்லந்துவனார்
"பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுள் பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்"
- பாலைக்கலி
அகநானூறு:
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ" - மாமூலனார் [265: பாலை: தலைவி]
"நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவன்
தங்கலர் வாழி தோழி" - மாமூலனார் [251: பாலை: தோழி]
"யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"
- எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் [ 149: பாலை: தலைமகன்]
"தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினை தேரன்"
- குறுங்குடி மருதனார் [4: முல்லை: தோழி]
"யாமே, பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே" - கபிலர்
"தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம்" - மாமூலர்
பதிற்றுப்பத்து:
"முரசு முழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல்புகழ்
கோட்டற்கு இனிது நின் செல்வம்" - [12]
"அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரிநிற்ப" - 13
"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன நெடுவேள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாள் மார்பின்
அன்பு சேர் உடம்பினர்" - 42
"ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக்
கொல்புனல் தளிரின் நடுங்குவன் நின்று நின்
எளியர் ஓங்கிய சிறுசெங் குவளை" -52
"பன்மீன் நாப்பண் திங்கள்போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை" - 90
பரிபாடல்:
பொன்னும் பொருளும் போகமும் அல்ல, நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே" - கடுவன் இளவெயினனார்
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல்கோயில்
தாதின் அனையர் தந்தமிழ்க் குடிகள்" மதுரை பற்றிய பரிபாடல்
புறநானூறு:
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நீர்வழிப் படூவும் புனைபோல்
ஆருயிர் முறை வழிப் படூவும்
பெரியாரை வியத்தலும் இலமே
சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே"
- கணியன் பூங்குன்றனார் [192: பொதுவியல்: பொருண்மொழிக் காஞ்சி]
"இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே"
- காரிகிழார் [6: பாடாண்: செவியறிவுறூஉ]
"வழிபடுவோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே"
- ஊண்பொதி பசுங்குடையார் [10: பாடாண்: இயன்மொழி]
"அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்" - கோவூர்கிழார்
"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"
- மதுரை இளநாகனார்
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை"
- இடைக்குன்றூர்க் கிழார் [76: வாகை: அரசவாகை]
"வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிது"
- கபிலர் [ 121: பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே"
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் [பொதுவியல்: பொ. காஞ்சி]
"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே"
- [புறம் 18 : பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]
குடபுலவியனார் [இதனை மணிமேகலையும் கூறுகிறது]
"கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படாண்"
-பரணர் [141 பாடாண்: பாணாற்றுப்படை/புலவராற்றுப்படை]
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறிவிலை வணிகன் ஆஅய் அல்லன்"
- உறையூர் ஏணிச்சேரி மடமோசியார் [134 பாடாண்: இயன்மொழி]
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
- ஔவையார் [186: பொதுவியல்: பொருண்மொழிக் காஞ்சி]
"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
- ஔவையார் [புறம் : 187 பொதுவியல்: பொருண்மொழி]
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே"
- நக்கீரர் [189 பொதுவியல்: பொருண்மொழி]
"செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன் பலவே"
- நக்கீரர் [189 பொதுவியல்: பொருண்மொழி]
"எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
- ஔவையார் [206: பாடாண்: பரிசில்]
"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று"
கழைதின் யானையார் [204: பாடாண்: பரிசில் ]
"மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தான்வாழும் நாளே"
- பாண்டியன் அறிவுடை நம்பி [188: பொதுவியல்: பொருண் மொழி]
"உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஓக்கல் தலைவன்"
- ஔவையார் [95: பாடாண்: வாள்மங்கலம்]
"குழவி இறப்பினும் ஊந்தடி பிறப்பினும்
ஆஅள் அன்று என்று வாளின் தப்பார்"
- சேரமான் கணைக்காலிரும் பொறை [74: பொதுவியல்:
முதுமொழிக்காஞ்சி]
"ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்
திங்கள் அனையை எம்மனோர்க்கே"
- மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் [59: பாடாண்: பூவைநிலை]
"எம்முளும் உளன்ஒரு பொருநன் ; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்தக் கால் அன்னோனே"
- ஔவையர்[87: தும்பை: தானைமறம்]
"ஒருவீர் தோற்பினும் தோற்பது நும்குடி
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே"
- கோவூர் கிழார் [45: வஞ்சி: துணைவஞ்சி]
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்"
- நரிவெரூஉத்தலையார் [195: பொதுவியல்: பொருண்மொழிக்காஞ்சி]
"சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே"
- ஔவையார் [235: பொதுவியல்: கையறுநிலை]
"வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"
- குடவாயிற் கீரனார் [242: பொதுவியல்: கையறுநிலை]
"களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிது"
- பூங்கணுத்திரையார் [277: தும்பை: உவகைக்கலுழ்ச்சி]
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"
- பொன்முடியார் [312: வாகை: மூதின்முல்லை]
"மாண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலையறுத் திடுவென் யான்"
- காக்கைப்பாடினியார் [278: தும்பை: உவகைக் கலுழ்ச்சி]
" ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ"
- ஔவையார் [101: பாடாண்: பரிசில்கடாநிலை]
"புலிசேர்ந்து போகிய கல்லாளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே"
-காவற் பெண்டு [86: வாகை: ஏறாண்முல்லை]
"இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு
ஒன்று ஈகுநரும் இல்லை"
- ஒவையார் [235: பொதுவியல்: கையறுநிலை]
"பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் செல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே"
- பெருங்கோப்பெண்டு [246: பொதுவியல்: ஆனந்தப்பையுள்]